List Widget

Thursday, April 22, 2010

அரவு "அல்குல்" என்றால் என்ன?

"எலே பெண்டாட்டி! சிற்றாதே பேசாதே!"-ன்னு மனைவிமார்களை எல்லாம் அதட்டுகிறாளோ கோதை? கணவன்மார்களுக்கு எதிராக வாய் திறக்கக்கூடாது என்று வாய்ப்பூட்டு போடுகிறாளோ ஆண்டாள்? இவளா புதுமைப் பெண்? :) அப்படியே "அல்குல்" என்ற சூடான சொல்லையும் கையாளுகிறாளே ஆண்டாள்! பார்க்கலாமா இன்னிக்கி? :)புதிர்-11: "தோத்தாத்ரி"-ன்னு பேரு கேள்விப்பட்டு இருக்கீங்க தானே? அப்படின்னா என்ன பொருள்? அதுக்கு "வானமாமலை" என்பது நேர்த் தமிழ்ப் பெயர்! ஜீவாவின் பதிவில் க்ளூ இருக்கு! இங்கே செல்லவும்!

"ஏல்-ஓர்" எம்பாவாய் விளக்கம் ஞாபகம் இருக்கு தானே? இந்தப் பதிவுக்கும் அது ரொம்ப ரொம்ப பொருந்தும்! :) கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து,செற்றார் திறல் அழியச், சென்று செருச் செய்யும்,குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!புற்று அரவு அல்குல் புனமயிலே, போதராய்!சுற்றத்து, தோழிமார் எல்லாரும் வந்து, நின்முற்றம் புகுந்து, முகில் வண்ணன் பேர் பாட,சிற்றாதே, பேசாதே, செல்வப் பெண்டாட்டி! நீஎற்றுக்கு உறங்கும் பொருள்? ஏல் ஓர் எம் பாவாய்!

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து = கறவை மாடுகளை எப்படி கறக்கணும்? கன்றோடு கறக்கணும்! கற்றுக்+கறவை = கன்று+கறவை! இலக்கணப் புணர்ச்சி விதி!சில பேரு "கற்று" என்பதற்குப் பால் கறப்பதைக் கற்றுக் கொண்டு வரணும்-ன்னு பொருள் கொள்வார்கள்! ஹிஹி! பால் கறப்பதற்கு ட்யூஷன் எல்லாமா வைக்க முடியும்? பால் கறப்பது மிகவும் எளிது! ஒரு முறை கண்ணு பார்த்தா அடுத்த முறை கை செய்யும்! சொல்லுங்கப்பு, யாராச்சும் கறந்து இருக்கீயளா? காசை அல்ல! பாலை! :))மாட்டைத் தடவிக் கொடுத்து, அன்பு காட்டி, கெஞ்சம் வைக்கோல் போட்டா போதும்! கறக்கும் போது கன்று அருகில் இருந்தாக்கா இன்னும் தானா சுரக்கும்! நீங்க காலால் பாத்திரத்தைக் பிடிச்சிக்கிட்டு, கையால் சும்மா இழுத்தாலே போதும்! பால் பெருகும்!அதுக்காக கடேசி சொட்டு வரை இழுக்கக் கூடாது! அது சுயநலம்! பெரும் பாவம்! மாட்டின் மடியில் கொஞ்சமாச்சும் பால் தங்கணும்!

கன்றுக்கு இரவு பசிக்கும் போது, இந்தப் பால் தேவைப்படும்!கறவை கரவாது கொடுக்கும்! கறந்துக்கிட்டே இருப்போம்! என்பது அறமும் அன்று! ஆண்மையும் அன்று!இந்த தர்மம் "புனிதப்" பசு மாட்டுக்கு மட்டுமல்ல! எல்லா மாட்டுக்கும் பொருந்தும்! இந்தப் "புனிதம்" என்பதெல்லாம் மனிதன் தன் சொந்த பிசினஸ்-க்காக உருவாக்கிக் கொண்டது தான்! மாடுகளுக்குத் தெரியப் போவதில்லை, தாங்கள் "புனிதப் பசு" என்று!மனுஷன் தான், தன்னைத் திரும்பிக் கேள்வி கேட்காத எதையும் "புனிதம்" ஆக்கி விடுவான்! அது பசுவாகட்டும்! இல்லை பதி ஆகட்டும்! புனிதமாக்கிப் புனிதமாக்கியே, எட்டக்க கொண்டு போய் நிறுத்தியும் விடுவான்! :)எல்லாக் கறவை மாடும் புனிதமானது தான்! பசு மட்டுமே புனிதம் அல்ல! கோ-சம்ரட்சணம் என்னும் ஆநிரை காத்தல் மிகவும் உயர்ந்தது! அது பசுக்களுக்கு மட்டும் அல்ல! எல்லா மாடுகளுக்கும் தான்! அதனால் தான் ஆண்டாள் எருமைச் சிறு வீடு-ன்னு எருமையையும் பாடுகிறாள், கூடவே பசுவையும் பாடுகிறாள்!
செற்றார் திறல் அழிய, சென்று செருச் செய்யும் கோவலர் = இப்படிக் கறவைகளைப் போற்றாமல் அதுகளுக்குக் கொடுமைகள் செய்யும் பகைவர்கள்! அவர்கள் திறலை அழித்து, போர் (செரு) புரியும் கோவலர்கள்! அவர்களே கோ-காவலர்கள்!கோ-சம்ரட்சணம் என்பது ஏதோ வடநெறி என்று எண்ணி விட வேண்டாம்! புனிதப் பசு, புனிதமில்லாக் கொசு-ன்னு கேலியும் பேச வேண்டாம்! (குறிப்பாகப் பகுத்தறிவாளர்கள்)ஆநிரை காத்தல் = பண்டைத் தமிழரின் அறங்களுள் ஒன்று!போரின் போது, முல்லை நிலத்தின் பசுக்களைத் தான் முதலில் கவர்ந்து, மிகவும் பத்திரமாக அப்புறப்படுத்துவார்கள்! இதுக்கு-ன்னு கோனார்களையும் கூடவே போர்க்களத்துக்குக் அழைத்துப் போவார்கள்! போரெல்லாம் அப்புறம் தான் துவங்கும்! இப்படி முல்லைநில மாயோன் நெறியை மிகவும் மதித்து வாழ்ந்த சமுதாயம் பண்டைத் தமிழ்ச் சமுதாயம்!பசுக்களைக் காக்கும் முல்லை மறவர்களுக்குக் கோவலர் என்று பெயர்! கோவலன் என்ற பெயரும் இங்கிருந்தே தோன்றியது தான்! கோவலன் = கோவிந்தன் = கண்ணன்!ஆயன், கோனான், கோவலன் என்றே குலப் பெயர்களும் உண்டு! இன்றும் திருக்கோவிலூர் நாச்சியாருக்கு பூங்+"கோவல்" நாச்சியார் என்றே திருப்பெயர்!சிலப்பதிகாரக் கோவலன் ஆயர் குலம் இல்லை என்றாலும், கோவலன் என்னும் பேர் எவ்வளவு பிரபலமாக இருந்திருக்க வேண்டும்! அதை ஒரு வணிகர் தலைவரான மாசாத்துவான் மகனுக்குச் சூட்டி இருப்பார்கள் என்பதையும் எண்ணிப் பாருங்கள்!இப்படி முல்லையும், மாயோனும், ஆயர்களும், ஆநிரைகளும் தமிழ்ப் பண்பாட்டின் பிரிக்க முடியாத பெருஞ்சொத்து! தமிழ்ச் சொத்தில் அவர்களுக்கும் சம உரிமையுண்டு என்பதை ஏகபோகக் குறிஞ்சிக் காவலர்களும், சில முருகப்பாக்களும் முனைந்து பார்க்க வேணும்! :))குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே = இப்படிக் குற்றமே இல்லாத நற்குடிக் கோவலர்கள்! அந்த ஆயர்கள் வீட்டுப் பொற்கொடியே! பெண்ணே!
புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய் = புற்றில் வாழும் பாம்பு படமெடுத்தாற் போலே, அழகிய வளைவுகள் (Curves) கொண்ட "அல்குலை" உடையவளே! காட்டு மயிலே! வா போகலாம்!(*** திருப்பாவை-புனிதம்-ஆன்மீகம் என்று சற்றே மெல்லியலாய் நினைப்பவர்கள், அடுத்த சில பத்திகளைத் தவிர்த்து விட்டு, பத்தி Resume-இல் வாசிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...நன்றி!)ஆண்டாள் இச்சொல்லைக் கையாள்வது என்னவோ நிஜம்! இதற்காக அவளை யாரும் தள்ளியும் வைக்க முடியாது! அவள் பதிவும் பாடலும் இடறவும் இடறாது! :)இந்த "அல்குல்" என்னும் சொல், மிக மிகச் சூடான குறிச் சொல்! :)அண்மைக் காலங்களில் பெரும் சச்சரவுக்குள்ளான சொல்! ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் புரிஞ்சிக்கிட்டு, ஆனா மொத்தமா புரிஞ்சிக்காம, வீண் கும்மி அடித்த ஒரு மாபெரும் சொல்!கவியரசர் கம்பரை இதை வைத்துக் கொண்டே பேரறிஞர் அண்ணா அவர்கள் கிழிகிழி-ன்னு கிழித்த சொல்! அப்படி என்னாங்க இருக்கு இந்த மந்திரச் சொல்லுல? ஹிஹி! மேலப் படிங்க!அல்குல் = இடை (அ) பெண்குறி (அ) பக்கம்! மொத்தம் மூனு பொருள்!இலக்கியத்தில் பெரும்பாலும் இடை என்ற பொருளில் தான் வருது! ஆனால் பெண்குறி என்ற ஒரு பொருளும் இருப்பதால், பல விவாதங்களில் இது பத்திக்கிட்டு எரியுது! :)அப்படியே பெண்குறியைக் குறித்தாலும் அதனால் பாதகமில்லை! உடற் கூறு வகுப்பில் சொல்லித் தருகிறோமே! அதே போல் தானே இலக்கியம்! அவ்வளவு தானே?ஆனால் ஆன்மீக இலக்கியத்தில் வருதே? வரட்டுமே! பகுத்தறிவாளர் நீங்க தானே சொல்லுறீங்க வறட்டு ஆன்மீகம் கூடாது-ன்னு? இது வரட்டும் ஆன்மீகமா வரட்டுமே? :)ஆன்மீகம் என்பதனாலேயே இச்சொல்லைத் தவிர்த்து விடவேண்டுமா என்ன? தேவை இல்லை! ஆன்மீகம் உடற்கூறு பேணுதல் பற்றியும் பேசுகிறதே!"வாம மேகலை இற, வளர்ந்தது அல்குலே!" என்பது கம்ப ரசம்! ஆனால் சில பேரின் எண்ணத்தில் அது காம ரசம்! சோம ரசம்! பீம ரசம்! :)இராமன் வில்லை முறித்து விட்டான் என்ற செய்தி கேட்டு, சீதையின் மேகலை இற, அவள் அல்குல் வளர்ந்ததே-ன்னு கம்பர் பாடினாலும் பாடினாரு! பாவம் மனுசன்! அதோ கதியாகி நிக்குறாரு!மேகலை = இடையைச் சுற்றிச் சற்றுத் தாழ்வாக அணியும் (ஒட்டியாணம் போல) ஒரு நகை! மணிமேகலை என்கிறோம் அல்லவா?மகிழ்ச்சிக் களிப்பில் சீதையின் ஒட்டியாணம் இடையோடு இறுகியது! நல்லா சாப்பிட்டாக்கா, பெல்ட் இறுகும்ல? இறுகினா என்ன ஆகும்? உங்க பெல்ட்டை இறுக்கி விட்டுக்கிட்டு அடியில் பாருங்க!தொப்பை இருக்கிறாப் போலத் தெரியும்! இடுப்புல ஒரு கயிறு/பெல்ட் கட்டி இறுக்கினா, இடுப்பின் மேலும், கீழும் சதை விரியும்ல? அதே தான் கம்பர் பாடினாரு! மேகலை இறுக்க, இடை வளர்ந்ததே! ஆனாப் பாவம், சர்ச்சைக்குரிய சொல்லைப் பயன்படுத்திட்டாரு! நம்ம மக்கள் சூடாக்கிட்டாய்ங்க! :)

அல்குல் பெண்களுக்கு மட்டும் தானா என்றால், அதுவும் இல்லை! இரு பாலருக்கும் பொது! இடையும், தொப்புள்/இடைக் கீழுள்ள வளைந்த சதைப் பகுதியும் அல்குல் என்று வழங்கப்படும்! முருகனுக்கும் அல்குல் உண்டு! ஹா ஹா ஹா! யாராச்சும் பழனியாண்டியின் திருமுழுக்கைப் பார்த்து இருக்கீங்களா? அப்படிப் பார்த்து இருந்தா, இப்படிவே பேசவே மாட்டீங்க!ஒரு பெண்ணின் இடையை விட, அம்புட்டு வளைவு, அம்புட்டு Curves, எங்க முருகனோட இடுப்பு! வள்ளியின் இடை கொடியிடை மட்டுமே! ஆனா முருகனின் இடை, புற்று அரவு இடை! பாம்பு போல் நெளிந்து வளைந்து மேலே செல்லும் உயிர்ப்புள்ள இடை! கோலி,பாலி,ஹாலி எல்லா வுட்டும் பிச்சை வாங்கணும் இப்பேர்ப்பட்ட இடுப்பு அழகுக்கு!அவன் முதல்-இடை-கடை என்னும் முச்சங்கத்துக்கும் உரியவன் என்றாலும், எனக்குப் பிடித்தது முருகனின் "இடைச்" சங்கம் மட்டுமே! :))அதுக்காக இலக்கியத்தில் வரும் அல்குல் எல்லாமே இடை-ன்னு சொல்ல வரலை! அந்த Contextக்கு ஏற்றவாறு பொருள் கொள்ள வேணும்! அவ்ளோ தான்! சிம்பிள்! :)சென்ற பாட்டில் நாற்றத் துழாய்-ன்னு பார்த்தோம் அல்லவா? நாத்தம் புடிச்ச துளசியைச் சூடும் நாராயணன்-ன்னா பொருள் கொண்டோம்? நாற்றம்=மணம் என்று தானே கொண்டோம்! அதே போலத் தான்!பெரியாழ்வாரும் அல்குல் என்று பாடுகிறார்! குழந்தையைத் தன் அல்குலில் ஏற்றி அமர்த்திக் கொள்கிறாளாம் தாய்! அப்படின்னா அல்குல் இங்கே என்ன பொருள்? இடை தானே!!!இரு மலை போல் எதிர்ந்த மல்லர்,இருவர் அங்கம் எரி செய்தாய்! உன்திரு மலிந்து திகழும் மார்வுதேக்க வந்து என் "அல்குல்" ஏறிஒரு முலை வாய் மடுத்து உண்ணாயே!ஆண்டாளும் அப்படியே தான் பாடுகிறாள்! புற்றில் வாழும் பாம்பு படமெடுத்தாற் போலே, அழகிய வளைவுகள் (Curves) கொண்ட "அல்குலை" உடையவளே!வளைந்த "இடுப்பு" கொண்டவளே! காட்டு மயிலே! வா போகலாம்! - இதுக்கு மேல Curves பத்தி கல்லூரி மாணவர்கள் கிட்ட கேட்டுக்கோங்கப்பா! இதுக்கே ஆன்மீக பேரன்பர்கள் சிலர் என் மேல் படு பயங்கரக் கோபமா இருக்காங்க-ன்னு இப்போ தான் சேதி வந்துச்சி :))அடியேன் நோக்கம்: ஆண்டாள் பயன்படுத்தும் இந்தத் தமிழ்ச் சொல், கோதையின் தெய்வத் தமிழ் - இதனால் எந்த "இடறலும்" இல்லை என்று காட்டவே, இதை விளக்கப் புகுந்தேன்! அடுத்த முறை இந்தப் பாசுரத்தை ஓதும் போது, மன நெருடல் இல்லாமல், வாய்விட்டு, உரக்கவே ஓதலாம்! ஆண்டாள் தேவை இல்லாமல் இப்படி ஒரு சொல்லைப் போட மாட்டாள்!(திருப்பாவை-புனிதம்-ஆன்மீகம்-பரிசுத்தம்! ஆன்மீகத்தை அன்றாட வாழ்வியலோடு கலக்கக் கூடாது! அது பத்தடி தள்ளியே வைக்கப்படணும்! தேவைப்படும் போது அதை எடுத்து யூஸ் பண்ணிக்கனும் என்பது ஆண்டாளும் அறியாத ஒன்னு! அடியேனும் அறியாத ஒன்னு! தனிமையில் என்னிடம் சினந்தவர்கள் அடியேனை மன்னிக்கவும்! முடிந்தால் இச்சொல்லுக்குக் கோதையையும் மன்னிக்கவும்!)
(*** திருப்பாவை-புனிதம்-ஆன்மீகம் என்று சற்று மெல்லியலாய் நினைத்தவர்கள்...Resume here...இங்கே தொடருங்கள்! புரிதலுக்கு நன்றி)சுற்றத்து, தோழிமார் எல்லாரும் வந்து = உன் சுற்றப் பெண்டிரும், தோழிகள் என்று இரு சாராரும் வந்து கூவறோமே!நின் முற்றம் புகுந்து, முகில் வண்ணன் பேர் பாட = உன் வீட்டின் முன்வாசலில் நின்று, மேகவண்ணன் கண்ணனைப் பாடுறோமே!முற்றம் = முன்றில், முன்வாசல்! இந்தக் கண்ணன் என்னும் காதலனைக் காண, பின் வாசல் வழியா பயந்தாங்கொள்ளி போல் ஓடத் தேவையில்லை! தைரியமா முன் வாசல் வழியாகவே வா! போகலாம்!சிற்றாதே பேசாதே, செல்வப் பெண்டாட்டி! = சிற்றாதே (முணுமுணுக்காதே)! பேசாதே (கத்தாதே)! என் செல்லப் பெண்ணே!சிற்றுதல் = சிணுங்குதல்; முணுமுணுத்தல்; எவ்வளவு அழகான தமிழ்ச் சொல் இல்லீங்களா?ஹும், ஹும்...நான் இப்போ வெளியில் வர மாட்டேன்...தூக்கம் வருது...நீங்க போயிக்கோங்க....என்னைப் ஃப்ரீயா விடுங்க! ஹூம்...என்று சிணுங்குவது, அப்படியே நம் கண் முன் தெரிகிறது பாருங்கள்!:)பெண்டாட்டி = பெருந்தனக்காரி! பெருமாட்டி! கொஞ்சம் மிதப்புல இருப்பவ!மிதப்பு என்றவுடன் பெண்டாட்டி=மனைவி-ன்னே எல்லா ஆண்களும் அர்த்தம் எடுத்துக்காதீங்கப்பா சாமீகளா!:)நீ எற்றுக்கு உறங்கும் பொருள்? = இப்படி நீ தூங்கிக்கிட்டே இருந்தா என்ன தான் அர்த்தம்? வாடீ வெளியே! :)ஏல் ஓர் எம் பாவாய்! ஏல் ஓர் எம் பாவாய்!ஆண்டாள் திருவடிகளே சரணம்!!

No comments:

Post a Comment