List Widget

Thursday, April 22, 2010

அல்குல் பற்றிய ஒரு பழைய கடிதம்

இது, நான் மின் தமிழில் எழுதிய முதல் கடிதம். இன்றைக்கு மறுபதிப்பு
காண்கின்றது. :-)



> ---------- Forwarded message ----------
> From: Hari Krishnan
> Date: 2008/7/30
> Subject: Re: [MinTamil] Re: தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு!
> To: minTamil@googlegroups.com

> 2008/7/30 வேந்தன் அரசு


>> >But so is the Sangam literature,


>> இது மெய்பிக்க முடியாதது.


>> அல்குல் என்பதற்கு பொது இலக்கியத்தில் ஒரு பொருள். மருத்துவ இலக்கியத்தில்
>> ஒரு பொருள் என்பது ஏற்கனவே மின்தமிழில் வாதிடப்பட்டது


> அல்குல் என்ற சொல்லுக்கு மூன்று பொருள் உண்டு.


> 1. side; 2. waist; 3. Pudendum muliebre


> என்பது OTL அகராதி, சென்னைப் பல்கலைக்கழக லெக்சிகன் தரும் விளக்கம். (1)
> பக்கம், (2) அரை (இடையை அடுத்த பகுதி) (3) பெண் பிறப்புறப்பு.


> இதில் என்ன வேதனை என்றால், தமிழிலக்கியத்தில் எந்த இடத்தில் அல்குல் என்ற
> சொல்லைப் பார்த்தாலும் ஒட்டுமொத்தமாக எல்லோரும் மூன்றாவது பொருளை மட்டும்தான்
> எடுத்துக் கொள்கிறோம்.


> உவமை சொல்கிறார்களே, அதில் ஏதாவது ஒன்று இந்த மூன்றாவது பொருளுடன் ஒத்துப்
> போகிறதா? புற்றரவல்குல். அது என்ன பாம்பு படம் எடுத்த மாதிரியா இருக்கிறது?
> தேர்த்தட்டு அல்குல். தேர்த்தட்டு என்ன வடிவத்தில் இருக்கும் இது என்ன
> வடிவத்தில் இருக்கிறது. (அன்பர்கள் என்னை தயவுசெய்து மன்னித்துக் கொள்ள
> வேண்டும். இந்தக் குழுவில் இருக்கும் பெண்களை சக்தி சொரூபமாகக் கருதி என்னுடைய
> வெளிப்படையான எழுத்தை மன்னிக்கவும், பொறுத்துக் கொள்ளவும் வேண்டும் என்று
> கேட்டுக் கொள்கிறேன். விஷயம் அவ்வளவு முற்றிவிட்டது. அறுவைச் சிகிச்சைதான்
> செய்யவேண்டியிருக்கிறது.)


> மாறாக, மான்குளம்பு, சோழியின் அடிப்பக்கம் என்று ராமசந்திர கவிராயர், அந்ததக்
> கவி வீரராகவ முதலியார் பாடல்களில் குறிப்பிடப்படும் உவமை மூன்றாவது
> பொருளில்தான் பயன்படுகிறது என்பதைத் தெளிவாகவே காட்டுகிறது.


> அப்படியானால், இந்தப் புற்றரவல்குல், பரவையன்ன அல்குல் (பரவை=கடல்) எல்லாம்
> எதைக் குறிக்கின்றன? கொஞ்சம் ஆங்கிலத்தைத் தொட்டுக் கொள்வோம். ஆங்கிலத்தில்
> hip என்றும் waist என்றும் சொல்கிறோம். இரண்டும் interchangeable ஆகப்
> பயன்படுத்தப்பட்டாலும், இரண்டுக்கும் ஒரே பொருள் இல்லை. hip என்றால் என்ன?


> *side of body below waist: *the area on each side of the body between the
> waist and the thigh


> என்பது Encarta தரும் விளக்கம். அதாவது வெய்ஸ்ட்டுக்கும் தொடைக்கும்
> இடைப்பட்ட இடம் ஹிப். அப்படியானால் வெய்ஸ்ட் என்பது என்ன?


> The narrowing of the body between the ribs and hips (வேர்ட்வெப் அகராதி)


> *body area between ribs and hips: *the part of the human trunk between the
> rib cage and the hips, usually narrower than the rest of the trunk (என்கார்ட்டா
> அகராதி)


> உடலில் குறுகிவரும் இடம் எதுவோ அது வெய்ஸ்ட். ஆகவேதான் ஆங்கிலத்தில் slender
> waist உண்டு, slender hip கிடையாது. உடலின் அந்தப் பகுதியை flaring hip என்று
> சொல்லவேண்டும்.


> உடல் குறுகி, பிறகு சரேலென்று விரிகிறது அல்லவா அந்தப் பகுதி ஹிப். குறுகி
> இருக்கும் இடம் வெய்ஸ்ட்.


> சரி. இங்கிலிபீஸ் எல்லாம் எதுக்கு என்று கேட்கிறீர்கள். அதுதானே? எது
> ஆங்கிலத்தில் வெய்ஸ்ட் என்று சொல்லப்படுகிறதோ அது இடை. 'பொய்யோ எனும்
> இடையாளொடும் இளையானொடும் போனான்'அப்படின்னும், இருக்கிறதோ இல்லையோ
> என்றெல்லாமும் கவிஞர்கள் பாடுகிறார்களே அதுதான் இது.


> எதை ஆங்கிலத்தில் ஹிப் என்று சொல்கிறார்களோ அது தமிழில் அரை என்றும் அல்குல்
> என்றும் சொல்லப்படுகிறது. That portion which flares up after the point where
> body had narrowed down.


> இப்படி விரியும் இடத்துக்கு மட்டுமே தேர்த்தட்டு, புற்றரவு போன்ற உவமைகள்
> பொருந்துகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். The outline of a cobra raising
> its hood resembles half of an hour-glass. தேர்த்தட்டு என்பதும் அப்படித்தான்
> தேரில் விரிந்து இருக்கும் இடம். இந்த உவமைகள் எதைக் குறிக்கின்றன? அரை
> (இடைக்குக் கீழே, *பக்கங்களில்* (not directly below) விரியும் பகுதியை.
> நிச்சயமாக பிறப்புறுப்பை அன்று.


> இன்னும் கன்வின்ஸ் ஆகவில்லை என்றால்,"கவைத்தாம்பு தொடுத்த காழூன்று
> அல்குல்"என்று பெரும்பாணாற்றுப்படை சொல்வது எதனை என்று விளக்கவேண்டும். "1
> கவைத்தாம்பு slip-knot, noose" என்பது ஓடிஎல் தரும் விளக்கம். (ஆடையின்)
> முடிச்சு போடப்பட்டு உள்ள அல்குல் என்று பெரும்பாணாற்றப்படை சொல்கிறது.
> பாவாடையின் முடிச்சை எங்கே போடுவார்கள்?


> சரி போகட்டும். "பூந்துகில்சேர் அல்குல் காமர்எழில் விழலுடுத்து" அப்படின்னு
> திவ்யப் பிரபந்தம் பேசுகிறது. (கண்ணரே.. இடம் மறந்து பூட்ச்சி.. யார்
> வாய்மொழி இது) அல்குலைச் சுற்றிலும் பூந்துகில் உடுத்தப்பட்டிருக்கிறது என்று
> இந்த வரி சொல்லுகிறது. என்னாங்க, மென்மையான துணியை எந்த அல்குலைச் சுற்றி
> உடுத்துவாங்க?


> சரி. அதுவும் வேணாம். பெரியாழ்வார் தன்னை யசோதையாக பாவித்துக் கொண்டு
> பாடுகிறார் அல்லவா, அங்க வாங்க:


> இருமலைபோலெதிர்ந்தமல்லர் இருவரங்கம்எரிசெய்தாய். உன்
> திருமலிந்துதிகழ்மார்வு தேக்கவந்து*என்னல்குலேறி*
> ஒருமுலையைவாய்மடுத்து ஒருமுலையைநெருடிக்கொண்டு
> இருமுலையும்முறைமுறையா ஏங்கிஏங்கிஇருந்துணாயே.


> முலையுண்ண வா என்று குழந்தையைத் தாய் அழைக்கிறாள். 'அப்பா, கொழந்தே, ஓடிவாடா
> என் கண்ணா, வந்து என் அல்குல் மேல ஏறிக்கோ. மார்பில் பால் அருந்து' என்று
> சொல்கின்றாள். பால் குடிக்கத் தன் குழந்தையை வந்து ஏறி அமரச் சொல்லும் தாய்
> எந்த இடத்தில் அமரச் சொல்வாள்? இடை குறுகியபின், விரியத் தொடங்கும் அந்த
> இடத்திலா அல்லது வேறெங்காவதா?


> தமிழிலக்கியத்தில் அல்குல் என்று குறிப்பிடப்படுவது பெரும்பான்மையும்
> ஆங்கிலத்தில் hip என்று எது குறிப்பிடப்படுகிறதோ அதுவே. மான்குளம்பு, சோழி
> போன்ற உவமைகளால் மட்டுமே அந்த இன்னொரு பொருள் குறிக்கப்படும். அப்படிக்
> குறிப்பிடப்படும் இடங்கள் வெகுசிலவே.


> இத்தோடு இந்த விஷயத்தை ஏழாவது முறையாகவோ எட்டாவது முறையாகவோ எழுதுகிறேன்,
> கடந்த பத்தாண்டுகளில். 'நல்ல கற்பனை வளம் உங்களுக்கு'அப்படின்னு எழுதறாங்க.
> கண்ணைப் பொத்திக் கொண்டு கருக்கிருட்டில் தேடினால் என்ன, காயற வெய்யில்ல தேடினா
> என்ன? கண்ணைத் திறந்தால்தான் வெளிச்சம் தெரியும்.


> கண் உள்ளவன் பார்க்கக் கடவன்.


> --
> அன்புடன்,
> ஹரிகி.


> --
> அன்புடன்,
> ஹரிகி.

No comments:

Post a Comment